தேக்கடியில் பராமரிப்பு பணிகள் செய்ய இடையூறு: கேரள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் உப கோட்ட அலுவலகம் உள்ளது. இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகியவையும் அங்கே உள்ளன.

இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான சிமெண்ட் தகடுகள், சின்டெக்ஸ் தொட்டி, பிளாஸ்டிக் குழாய்கள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை அதிகாரிகள் கொண்டு சென்றபோது, தேக்கடி நுழைவுப் பகுதியில் உள்ள கேரள சோதனைச் சாவடியில் அம்மா நில வனத்துறையினர் அதனை வழிமறித்து பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லையென்றும், பெரியாறு புலிகள் காப்பக இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டுமென்று தெரிவித்ததாகவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உரிய விளக்கமளித்தும் அதை ஏற்க கேரள வனத் துறை மறுத்துள்ளதாகவும், இதனையடுத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் அங்கேயே நாட்கணக்கில் நிறுத்தக்கூடிய துர்ப்பாக்கிய சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அலுவலகப் பராமரிப்புப் பணிக்குகூட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று சொல்வதும், அதற்கு வனத் துறையின் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கேரள அரசின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் நல்ல தோழமை உணர்வுடன் இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டிய கேரள அரசு, தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறுகளை விளைவித்துக் கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்துப் பேச வேண்டிய முதல்-அமைச்சர் மவுனம் சாதிக்கிறார்.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கேரள அரசின் செயலை தட்டிக் கேட்பதோடு, இதனை கேரள முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற இடையூறுகளைத் தடுத்து நிறுத்தவும், எவ்வித தயக்கமுமின்றி தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… உக்ரைன்-ரஷியா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.