மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி இரண்டரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அவரது கார் ஓட்டுநர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான்.
வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான தர்மராஜ், தொழில் நிமித்தமாக இரண்டரை கோடி ரூபாய் பணத்துடன் தனது கடை ஊழியர் கோவிந்தராஜ் என்பவரோடு காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். காரை அவரது ஆக்டிங் டிரைவர் பிரவீன் குமார் என்பவன் ஓட்டிச் சென்றுள்ளான். திருமங்கலம்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேசநேரி என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கோவிந்தராஜுவும் பிரவீன் குமாரும் இறங்கியுள்ளனர்.
அப்போது இவர்களது காரை நீண்ட நேரமாக பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்து ஒருவன் இறங்கி வந்து, தர்மராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி காருடன் அவரைக் கடத்திச் சென்றுள்ளான். அத்திப்பட்டி என்ற இடத்தில் தர்மராஜிடம் இருந்து ஒரு சவரன் மோதிரம், 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு, அவரை இறக்கிவிட்டுவிட்டு, இரண்டரை கோடி ரூபாய் பணத்துடன் காரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
ஒன்றும் தெரியாதவன் போல் கோவிந்தராஜுவுடன் காவல் நிலையம் சென்று கடத்தல் குறித்து புகாரளித்த பிரவீன்குமாரை போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவன் அவன்தான் என்பது தெரியவந்தது. பிரவீன்குமாரையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்த போலீசார், கொள்ளையடித்த பணத்தையும் காரையும் பறிமுதல் செய்தனர்.