5 மாநில தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தங்களது குடும்பம் சற்று விலகியிருக்க தயார் என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, செயற்குழு விரும்பினால், கட்சியின் செயல்பாடுகளிலிருந்து தாமும் ராகுல் மற்றும் பிரியங்காவும் சற்று விலகியிருக்க தயார் என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது இந்த முடிவை நிராகரித்த மூத்த நிர்வாகிகள், கட்சியை சோனியா காந்தியே வழிநடத்தவும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்ட போதிலும் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியை அறிவிக்குமாறு, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் மேலிடம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் பாஜக அரசின் தவறான ஆட்சியை மக்களிடம் எடுத்துரைப்பதில் சீரிய முறையில் தாங்கள் செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் சர்வாதிகாரத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என்றும் துடிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செயற்குழு கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் சிந்தனை முகாம் என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டு கட்சியை வலுப்படுத்துவது பற்றி மீண்டும் ஆலோசிக்கப்படும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM