சமீபத்தில் நடந்த ஐந்து மாநில பொதுத்தேர்தலில் பஞ்சாப் தவிர
உத்தரப் பிரதேசம்
,
உத்தராகண்ட்
, மணிப்பூர், கோவா ஆகிய நான்கில்
பாஜக வெற்றி
வாகை சூடியிருக்கிறது. அதாவது, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மாநிலங்களைத் தக்கவைத்திருக்கிறது.
இந்த ஐந்து மாநிலங்களில், உத்தரப் பிரதேசத்தில் ஒரு முக்கிய மாற்றத்தைக் காண முடிகிறது. அது – சமாஜ்வாதி கட்சியின் எழுச்சி!
கடந்த சில மாதங்களாகவே, பாஜகவிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் – குறிப்பாக செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்டஇனத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் அடைக்கலமானார்கள்!
இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. அப்படியே பெற்றாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் இது தொடராது என்ற யூகம் இல்லாவிட்டால் இப்படி கும்பல் கும்பலாக கட்சி மாறியிருக்க வாய்ப்பு இல்லை.
யோகியின் ஆட்சி எப்படிப்பட்டது?
இதற்குக் காரணம், பாஜகவின் முதல்வர் யோகியின் ஆட்சி நிர்வாகம். கொரோனா காலத்தில் ஆக்ஸிஷன் கிடைக்காமல் குழந்தைகள் இறந்தன,, இதைச் சுட்டிக்காட்டியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், மரணமைடந்தவர்கள் பிணங்கள் கங்கையில் மிதந்தன! பசுவுக்குப் போர்வை போத்தியவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு இல்லை என்றார்கள்!
ஒன்றிய அமைச்சரின் மகன் விவசாயிகள் மேல் ஜீப்பை ஏற்றிக் கொன்றார்! விவசாயிகளின் தொடர் போராட்டம் பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிறகு எப்படி பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது?
டில்லி பத்திரிகையாள நண்பர், “மாநிலத்தில் கணிசமாக உள்ள ஜாட் சமூகத்தினர், வழக்கமாக ராஷ்ட்ரிய லோக் தள் கட்சிக்கு்தான் வாக்களிப்பார்கள். அவர்களில் பலர் இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இஸ்லாமியர்களும் இங்கு ஒரு தனிப்பெரும் சக்திதான். ஆனால் அவர்கள் வாக்கு, சமாஜ்வாதி, ராராஷ்ட்ரிய லோக் தள், பகுஜன் சமாஜ் எனப் பிரிந்தது. இதில் ஒவைசிக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆகவேதான் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் தொகுதிகளில்கூட பாஜக வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஏதுமில்லை என்றாகிவிட்டது. சமாஜ்வாதி கட்சி, சொல்லத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. மாயாவதி இந்தத் தேர்தலில் கவனம் செலுத்தவே இல்லை. ஆகவே தலித் மக்களின் வாக்கு ஓரளவு சமாஜ்வாதி பக்கம் திரும்பியது” என்கிறார்.
இவர் கூறும் முக்கியமான இன்னொரு விஷயம், “உ.பி.யில் ஆட்சியில் இருந்த பாஜக அதிகபட்சமாக என்னென்ன முறைகேடுகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தது. இரண்டு கட்டத்தில் நடத்தி முடிக்க வேண்டிய தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது, இதற்கு உதவியது. ஏற்கெனவே மேற்குவங்க மாநிலத்திலும் இதுவே நடந்தது. அதாவது அங்கு ஆட்சியில் இல்லாத பாஜக, கடந்த தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. தனியாக போட்டியிட்ட காங்கிரசை மக்கள் தனித்து நிற்க வைத்து விட்டனர். இத்தனைக்கும் பிரியங்கா உ.பி.யைத்தான் சுற்றிச் சுற்றி வந்தனர். ஆனால் மாநிலத்தில் செல்வாக்கான தலைவர்கள் எவரும் அக்கட்சியில் இல்லை என்பது பெரும் பலவீனமாகிவிட்டது” என்றார்.
ஆக, பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பிரிந்து நின்றது; காங்கிரசின் செல்வாக்கு இன்மை, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவையே, முதலமைச்சர் யோகியின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியை மீறி வெற்றியைத் தந்திருக்கின்றன.
இதோடு யாரும் சொல்லத் தேவையில்லாத – அனைவரும் அறிந்த காரணம், பாஜகவின் மத அரசியல்!
உத்தரப் பிரதேசத்திலிருந்து 2000ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட உத்தராகண்ட் நிலையும் கிட்டதட்ட உ.பி. போலத்தான். இங்கு 82% சதவிகிதம் பேர் இந்துக்கள். இந்தியாவிலேயே முற்பட்ட வகுப்பினர் மிக அதிக அளவில் வசிப்பது இங்குதான் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாஜக ஆதரவாளர்கள். பிற்படுத்தப்பட்டோரும் இங்கு கணிசமாக வசிக்கிறார்கள். இவர்களில் பலரும் பாஜக ஆதரவாளர்களே. ஆகவே இங்கு பாஜக வெற்றி பெற்றது வியப்பில்லை.
கோவா மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த முறை தேர்தலில் வென்றே ஆட்சி அமைக்கிறது. இத்தனைக்கும் அங்கும் மோசமான நிர்வாகத்தையே பாஜக அளித்தது. தவிர, பாஜகவை விரும்பாத கிறித்துவ மக்கள் அதிகமாக உள்ள மாநிலம் இது. இந்த முறை கோவாவில் புதிதாகக் களம் கண்ட திருணமூல் காங்கிரஸ் ஆம் ஆத்மி ஆகியவை கணிசமான ஓட்டுக்களைப் பிரித்தது பாஜகவுக்கு சாதமாக ஆகிவிட்டது.
மணிப்பூரில் பாஜக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அதுவே ஆட்சி அமைக்கும். காரணங்கள் சொல்லாமலேயே புரியும். இதையெல்லாம் கடந்து ஆராய்ந்து பார்த்தால், பாஜக, உத்தரப் பிரதேசத்தில் முன்பை விட குறைவான தொகுதிகளையே பெற்றிருக்கிறது. கோவா, மணிப்பூரில் முக்கியடித்து இடங்களைப் பெற்று இருக்கிறது.
இன்னொரு கோணத்திலும் உ.பி. தேர்தல் முடிவைப் பார்க்கலாம்.
“மாநிலத்தில் வேலை வாய்ப்பு இல்லை. வெளி மாநிலங்குக்கு ஓட வேண்டி இருக்கிறது. கல்வி, சுகாதாரம் எல்லாம் தரமற்ற நிலையில் இருக்கிறது. நிர்வாகத் திறன் இல்லை. அப்படியும் நமது கட்சிக்கு மக்கள் வாக்களிதிருக்கிறார்கள். ஆகவே மதவாத அரசியல், எதிர்க்கட்சிகளை பிரிப்பது ஆகியவையே போதும்” என பாஜக முடிவுகட்டியிருக்கும்.
இதே பாதையில் உ.பி. மட்டுமல்ல, பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, ஒன்றியத்தின் ஆளும் கட்சி என்ற நிலையில் ஒட்டுமொத்த நாடும் சென்றால் என்ன ஆகுமோ என்பதுதான் கவலையாக இருக்கிறது.