கொரோனாவுக்கு
தடுப்பூசி
மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில்
கொரோனா தடுப்பூசி
போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வந்தது.
இதனிடையே, ஒமைக்ரான் பரவல் மூன்றாம் அலைக்கு வித்திட வாய்ப்புள்ளது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், பூஸ்டர் டோஸ் போடவும் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, “15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும்” என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மருத்துவக் குழுக்கள் நேரடியாக சென்று தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், நாளை மறுநாள் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா, “மார்ச் 16ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் தேசம் பாதுகாப்பாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் அலையின் போது, இரண்டாவது, மூன்றாவது அலைகளின் போதும்கூட மற்ற நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் இருந்த போது, சீனாவில் குறைவாகவே இருந்தது. தற்போது சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அது நான்காம் அலைக்கு வித்திட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்து வருகிறது. இந்த சூழலில் 12 வயதுக்கு மேற்பட்ட
சிறார்களுக்கு தடுப்பூசி
போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.