புதுடில்லி : நாடு முழுதும், 12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் – சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளை துவங்குகிறது. இதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், ‘முன்னெச்சரிக்கை டோஸ்’ எனப்படும், ‘பூஸ்டர்’ டோஸை செலுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கிடையே கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இரண்டு டோஸ்
‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசியும், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஜனவரி 16ல், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. பின், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துவங்கின.
கடந்த ஜனவரியில், 15 – 18 வயதுக்கு உட்பட்ட இளம் பருவத்தினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இதற்கிடையே இரண்டு டோஸ்களை செலுத்தியவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 12 – 14 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை துவங்கப்பட உள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது:குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால், நம் நாடு பாதுகாப்பாக இருக்கும். எனவே மார்ச் 16 முதல், 12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க உள்ளன.
‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசி
இதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்டோர், வேறு நோய் இருந்தால் மட்டுமே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது. தகுதியுள்ள அனைவரும் முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தெலுங்கானாவைச் சேர்ந்த, ‘பயாலஜிக்கல் – இ’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசி, 12 – 14 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.