சென்னை: நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், வார்டுகள் குழுத் தலைவர், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல்கள் வரும் மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 21 மாநகராட்சிகளுக்கான வார்டுகள் குழு தலைவர்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 30-ம் தேதி, புதன்கிழமையன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் பகல் 2.30 மணிக்கு, 21 மாநகராட்சிகளுக்கான நிலைக்குழு உறுப்பினர்களான, கணக்குகுழு உறுப்பினர்கள், பொது சுகாதார குழு உறுப்பினர்கள், கல்விக் குழு உறுப்பினர்கள், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு உறுப்பினர்கள், நகரமைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் பணிகள் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும்.
இதே போல் மார்ச் 31-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு, 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நியமனக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும், 138 நகராட்சிகளுக்கான ஒப்பந்தக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும்.
மார்ச் 31-ம் தேதி பகல் 2.30 மணிக்கு, நிலைக்குழு தலைவர்களான, கணக்குகுழு தலைவர், பொது சுகாதார குழு தலைவர், கல்விக் குழு தலைவர், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர், நகரமைப்புக் குழு தலைவர் மற்றும் பணிகள் குழு தலைவர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும்.
மேற்காணும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் சிசிடிவி (CCTV) பதிவு மற்றும் காவல்துறை பாதுகாப்போடு நடைபெறவுள்ளது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கூறியுள்ளார்.