நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பழுதான 'லிப்ஃட்’ -2 மணி நேரமாக சிக்கித்தவித்த 13 பயணிகள்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி பழுதானதால் இரண்டு மணி நேரமாக பயணிகள் மின்தூக்கியினுள் சிக்கித் தவித்தனர்.

எப்போதும் பரபரப்பாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் பிரதான இடமாகவும் உள்ளது சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். இங்குள்ள மின்தூக்கியில் நேற்று மாலை குழந்தை உள்பட 13 பேர் சிக்கித்தவித்த நிகழ்வு பரபரப்பை உண்டாக்கியது.
ஒன்றரை வயது குழந்தை, 5 பெண்கள் உள்பட 13 பேர் ரயில் நிலையத்திலுள்ள மின்தூக்கியில் சென்றப்போது நடுவில் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து மின்தூக்கியில் இருந்த உதவி எண்ணை அழைத்து தகவல் தெரிவித்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்தது ரயில்வே காவல்துறை மற்றும் தொழில்நுட்பக்குழு. முதல்கட்டமாக மின்தூக்கியை இயக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, மின்தூக்கியின் மேல்பகுதியில் இருந்த மின்விசிறியை, உள்ளே இருந்தவர்கள் உதவியுடன் அகற்றினர். பின்னர் கயிறுகட்டி முதலில் பெண் குழந்தையை வெளியே தூக்கினர். அதனைத்தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக சுமார் 2 மணிநேத்துக்கு பின் மீட்கப்பட்டனர்.

image
நுங்கம்பாக்கம் ரயில் நிலைய மின்தூக்கியை இயக்கவோ அல்லது அதனை பராமரிக்கவோ பணியாளர்கள் யாரும் இல்லையென பயணிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் அதிக பாரம் காரணமாகவே மின்தூக்கி பழுதாகியிருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

நல்வாய்ப்பாக அனைவரும் மீட்கப்பட்டபோதும், இந்த ஒரு நிகழ்வை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்தூக்கியை பராமரிக்க தனி பணியாளரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க: சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.