சென்னை: நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் எனபதை ரத்து செய்ய வேண்டும்; வேளாண் விளைப்பொருட்களை சேமித்து வைக்க தேவையான ஊராட்சிகளில் குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை, தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டுக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து இச்சங்கம் இன்று வெளியட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் – உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவசாயிகள் – விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அரசிடம் அளித்த ஆலோசனைகள்:
1. கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயத்திற்கு கடன் வழங்குவதில் சிறு-குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சிறு-குறு விவசாயிகள் அனைவருக்கும் கடன் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
2. அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் முழுவதும் தாமதமில்லாமல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். கட்டாயப்படுத்தி மூட்டைக்கு ரூ.40 முதல் 50 வரை வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் எனபதை ரத்து செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
3. ஆறுகள், கால்வாய்க்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணி ஆண்டுதோறும் ஏப்ரல்- மே ஆகிய இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். போதுமான நிதி ஒதுக்கீடும், விவசாய பிரதிநிதிகளின் கண்காணிப்பு குழுவும் உருவாக்கப்பட வேண்டும்.
4. காவிரி – வைகை – குண்டாறு, தாமிரபரணி – நம்பியாறு இணைப்பு திட்டம் விரைவாக முடிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
5. விவசாயத்திற்கு மின் இணைப்புக்கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் இணைப்பு வழங்குவதுடன், மும்முனை மின்சாரம் நாள் முழுவதும் வழங்கும் வகையில் விதிகள் திருத்தப்பட வேண்டும்.
6. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500-ம் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000-ம் விலை தீர்மனித்து வழங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கும் குறைந்தபட்ச விலை தீர்மானித்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
7. வேளாண் விளைப்பொருட்களை சேமித்து வைக்க தேவையான ஊராட்சிகளில் குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும்.
8. விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவும், அரசுக்கு ஆலோசனை வழங்கவும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
9. வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இயற்கை பேரிடராக கருதி முழுமையான இழப்பீடு தாமதமில்லாமல் வழங்க வேண்டும்.
10. வேளாண்மை துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் அறிவியல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், மதிப்பு கூடடப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யவும் வழிவகை செய்ய வேண்டும்.
11. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செம்மையாக செயல்படுத்தவும், வேளாண்மைக்கு இத்திட்டத்தை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மழைக்கால நிவாரணம் நான்கு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.
13. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி தயாரித்து விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட வேண்டும்.
14. சிறு தானியங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு நடவடிக்கை வேண்டும்.
15. உழவர் சந்தைகள் மேம்படுத்தப்பட்டு விவசாயிகள் அதில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.