சண்டிகர்: பஞ்சாப் முதல்வரை தோற்கடித்த ஆம் ஆத்மி வேட்பாளரின் தாய் இன்னமும் அரசு பள்ளியில் சுகாதார பணியாளராக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். இதில் பாதவுர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட லாப் சிங் உகோக் என்பவரிடம் 37,550 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தோற்கடித்த லாப் சிங் உகோக்கின் தாய் பல்தேவ் கவுர் அரசு பள்ளியில் சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது. தனது மகன் எம்எல்ஏ-வான பிறகும் கவுர் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து கவுர் கூறும்போது, “எனது மகன் தேர்தலில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரை எதிர்த்து போட்டியிட்டாலும் என் மகன் வெற்றி பெறுவார் என நம்பினோம். துடைப்பம் (ஆம் ஆத்மி சின்னம்) எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கம் ஆகும். நாங்கள் எப்போதும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். என்னுடைய மகன் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பள்ளியில் எனதுபணியை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.
கூலி தொழிலாளரான லாப்சிங்கின் தந்தை தர்ஷன் சிங் கூறும்போது, “மக்கள் என் மகனைஎம்எல்ஏவாக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் நலனுக்காக என்மகன் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் முன்பைப் போலவே வாழ்க்கையைநடத்துவோம்” என்றார்.