அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளைக் கைப்பற்றி முதல்முறையாக பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அமிர்தசரசில் நேற்று வெற்றி ஊர்வலம் நடந்தது. இதில் திறந்த வாகனத்தில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி கேஜ்ரிவாலும் மானும் சென்றனர்.
ட்விட்டரில் கேஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், ‘‘பஞ்சாபில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய 3 கோடி பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். சீக்கிய மதகுருவின் நகரான அமிர்தசரசில் ஊர்வலமாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். நேற்று காலை அமிர்தசரஸ் வந்த கேஜ்ரிவாலை பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்றனர்.