சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 95 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை.
இன்று ஒரே நாளில் 204 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு பதிவாகாத நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கடலூரைச் சேர்ந்த 85 வயது நபர் இறந்திருக்கிறார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,024 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 1,054 பேர் சிகிச்சையில் உள்ளனர்.