கதக், : கேலுார் கிராமத்தில், நிலத்திலிருந்து தங்களை வெளியேற்றுவதாக கூறி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட, பெண் விவசாயியின் மூன்று குழந்தைகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தத்தெடுத்துள்ளார்.கதக் முன்டரகியின் கேலுார் கிராமத்தில் பல விவசாயிகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்கின்றனர்.
இவர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, வனத்துறை அதிகாரிகள், பயிர்களை அழித்து விவசாயிகளை வெளியேற்றி, நிலத்தை கைப்பற்றினர்.இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பெண் விவசாயிகள் நிர்மலா, சரோஜா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிர்மலா உயிரிழந்தார்.அமைச்சர் ஸ்ரீராமுலு, நேற்று மதியம் அவர் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். தனிப்பட்ட முறையில் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். அவரது மூன்று குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டு, அவர்கள் கல்விக்கான முழு செலவையும், தானே ஏற்பதாக நம்பிக்கையளித்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சரோஜா குடும்பத்தினருக்கு, அமைச்சர் ஸ்ரீராமுலு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.இதே நேரத்தில், சம்பவத்தை கண்டித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்து கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Advertisement