உக்ரைன் போர் மூன்றாவது வாரத்தைக் கடந்துள்ள நிலையில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு எட்டப்படலாம் என இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இரு தரப்பினருக்கும் இடையில் அமைதித் தீர்வு எட்டப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில், தாங்கள் பேச்சுவார்த்தைக்குதான் தயாரே ஒழிய, சரணடைவதற்கோ அல்லது ரஷ்யாவின் கட்டாய நிபந்தனைகளுக்கு உட்படுவதற்கோ அல்ல என்பதை உக்ரைன் தெளிபடுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட Leonid Slutsky, பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், இன்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள Mykhailo Podolyakம், ரஷ்யா ஆக்கப்பூர்வமாக பேசத்துவங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளதைத் தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், நேற்றும் ரஷ்யப் படைகளின் ஏவுகணைகள், உக்ரைன் இராணுவத் தளம் ஒன்றைத் தாக்கியதில் 35 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.