நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய வகைப் பேருந்து கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று (14) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை திருத்தியமைத்துள்ளது.
இதற்கான கட்டண பட்டியல்கள் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றதுடன், பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அமுனுகம தெரிவித்திருந்தார்.
அண்மைய எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என தனியார் பேருந்து நடத்துநர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.