சென்னைக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முக்கிய இணைப்பு பாலமாக பெருங்களத்தூர் இருக்கிறது. இங்கு போக்குவரத்து நெரிசல் மிக முக்கியமான ஒரு பிரச்சனை. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை மேம்பாலம் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.தென் தமிழகத்தின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் உள்ள மேம்பாலத்தின் ஒரு புறம் மே மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு தயார்படுத்தவும், மேம்பாலத்தின் கட்டுமானப்பணிகளை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் நான்கு மேம்பாலங்களுக்கு ஆறு பாதைகள் உள்ளன. முதல் பாதை பெருங்களத்தூரிலிருந்து வண்டலூர் செல்லும் வழியாகவும், இரண்டாவது பாதை வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் செல்லும் வழியாகவும், கடைசி பாதை கிழக்கு புறவழிச்சாலைக்கு செல்லும்.
தாம்பரம் அல்லது மதுரவாயல் பைபாஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள், இந்த சந்திப்பை சிரமமின்றி கடந்து செல்லலாம். பெருங்களத்தூர் ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா நகருக்குச் செல்லும் இரண்டாவது சாலை மேம்பாலம் அடுத்த ஐந்து மாதங்களுக்குள் தயாராகிவிடும். மேம்பாலத்தின் கட்டுமானப்பணி முடிந்தவுடன் பொதுமக்களுக்கு திறக்கப்படும், இதனால் போக்குவரத்து நெரிசல் 60% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 234 கோடி செலவில் 750 மீட்டர் நீளமுள்ள வண்டலூர்-பெருங்களத்தூர் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.