போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: உக்ரைன்-ரஷியாவுக்கு இந்தியா வேண்டுகோள்

நியூயார்க்:
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:
பகையை நிறுத்தும் நோக்கில் நேரடி தொடர்புகள் மற்றும் பேச்சு வார்த்தைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இது தொடர்பாக ரஷிய கூட்டமைப்பு மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா தொடர்பில் உள்ளது. டெல்லி தொடர்ந்து தொடர்பு கொண்டு இருக்கும். 
ரஷிய-உக்ரைன் மோதல்கள், இரு தரப்பிலும் ஏற்படுத்திய மனித உயிரிழப்புகள் குறித்து இந்தியா கவலை தெரிவிக்கிறது. இந்த போர் ஒரு மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி உள்ளது. 
உக்ரைனில் நடக்கும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எங்கள் பிரதமர் அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் (இரு தரப்பு) உரையாடல் மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கையை தவிர இதில் வேறு வழியில்லை.
ஐநா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் நாடுகள் இடையேயான இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்துகிறது. 
இதுவரை, சுமார் 22,500 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். (இந்தியர்களை அழைத்து வரும்) எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்த அனைத்து கூட்டாளிகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.