மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறப்பு அதிகரிப்பு: விழிப்புணர்வை அதிகரிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2017-18 காலத்தில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழ்நாடு 3-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கேரளம், மராட்டியத்துக்கு அடுத்தபடியாக இருந்த தமிழகம் இப்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது.
2016-17-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் (ஒரு லட்சம் மகப்பேறுகளில்) கேரளத்தில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரம் – தெலுங்கானம் தலா 7 குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 மட்டுமே குறைந்துள்ளது. ஆந்திரத்துடன் சமநிலையில் உள்ள தமிழகம் விரைவில் 5-வது இடத்திற்கு தள்ளப் படலாம்.
தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது. ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
யு-டியுப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.