மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரம் பகுதியில் இருந்து 40 கிமீ தொலைவில் 50 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது. நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அதனை சேதப்படுத்தியது மட்டுமின்றி பல இடங்களில் காவி வண்ணம் பூசி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல் துறை கூற்றுப்படி, காலை 6 மணியளவில் அவ்வழியாக வந்த இளைஞர்கள் சிலர் மசூதிக்கு காவி நிறம் பூசப்பட்டிருப்பதையும், கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு. மசூதி பாதுகாவர் அப்துல் சத்தாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அப்துல் சத்தார் தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு கூறுகையில், மசூதியின் மரக்கதவு உடைக்கப்பட்டு, அருகிலிருந்து மரு ஆற்றில் போடப்பட்டிருந்தது. கோபுரம் மட்டுமின்றி கல்லறை, நுழைவு வாசலிலும் காவி வண்ணம் பூசப்பட்டிருந்தது என்றார்.
இவ்விவகாரத்தில் காவல் துறை மெத்தனமாக செயல்பட்டதாகவும், பின்னர் கிராமவாசிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட பிறகே, காவல் துறை முழு வீச்சில் களமிறங்கியதாக கூறப்படுகிறது. செம்ரியாவில் இருந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழு சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மசூதிக்கு மீண்டும் பழைய நிற பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெறுகிறது. மசூதியை சீரமைக்க கிராம மக்களுக்கு உதவியாக தீயணைப்பு படையின் இரண்டு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
மக்கன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமந்த் ஸ்ரீவஸ்தவ் கூறியதாவது, ” இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். முதலில் மசூதியை மீட்டெடுப்பதே முன்னுரிமை பணி. அவை நடைபெற்றுகொண்டிருக்கின்றனர். அடுத்து, குற்றவாளிகளை கைது செய்வோம்.
இப்பகுதியில் இரு சமூகத்தினரும் அமைதியாக வாழ்வதாலும், கடந்த காலங்களில் எவ்வித மத பிரச்சினை இல்லாததாலும், இச்செயலில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றார்.