புதிய கல்விக் கொள்கை இந்திய மாணவர்களை உலக அளவில் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை வந்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கல்வியின் தரம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இதற்காகத் தான் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதை மேம்போக்காக கூறவில்லை என்றும், தான் 16 பல்கலைக் கழகங்களை நிர்வகித்துக் கொண்டிருக்கும் வேந்தராக இதை கூறுவதாக தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி தெரிவித்தது போல், புதிய கல்விக் கொள்கை இந்த நாட்டு மக்களை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் எனவும், உலகில் உள்ள தலைசிறந்த பல்கலைகளின் பட்டியலில் நம் நாட்டு பல்கலைகள், கல்லுாரிகள் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதை இந்த புதிய கல்விக் கொள்கை மாற்றும் என்றும் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் தான் முழுமையாக முன்னேற முடியும் என்றும், அதோடு இந்த புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கு முக்கிய பங்கு வகிப்பது போல், புதிய கல்விக் கொள்கை, கல்விக்கும் வழிவகுப்பதோடு, ஊட்டச்சத்து குறித்தும் தெரிவிப்பதாகவும், அதனால், தனிப்பட்ட முறையில், கொள்கை மாறுபாடு இருக்கிறது என்பதற்காக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது இந்திய மாணவர்களை உலக அளவில் பிரமாண்ட இடத்துக்கு அழைத்து செல்லும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.