பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று மீண்டும் அதிரித்த வரும் நிலையில் இன்று தொற்று எண்ணிக்கை 2,300 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
சீனாவில் தான் கரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை முன் வைத்து சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஒரே ஒரே நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் குவாரன்டைன் முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விமர்சனங்களை முன் வைத்தது.
இரும்புக் கன்டெய்னர்களில் லட்சக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கோவிட் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு சர்வாதிகாரப் போக்குடன் நடப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அதுபோலவே ஒரு குடியிருப்பில் ஒருவருக்குக் கரோனா உறுதியானாலும் கூட ஒட்டுமொத்த குடியிருப்பையும் அப்புறப்படுத்தி முகாமுக்குக் கொண்டு சென்று விடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.
இந்தநிலையில் சீனாவில் கடந்த சில நாட்களக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இன்று புதிதாக நாடு முழுவதும் 2,300 புதிய வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. நேற்று சீனாவில் 3,400 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்று எண்ணிக்கை உயர்ந்தது. இது இரண்டு ஆண்டுகளில் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது.
அதேபோல், ஆங்காங்கே தீவிர லாக்டவுன்களையும் சீனா அமல்படுத்தி வருகிறது. சீனாவில் லாக்டவுன் என்றால் அதில் சிறு தளர்வு கூட காண முடியாது. மக்கள் லாக்டவுனுக்கு அஞ்சி அத்தியாவசியப் பொருட்களை பயத்தில் வாங்கிக் குவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கரோனா பரிசோதனைகளையும் சீனா அதிகரித்துள்ளது. சுகாதார பணியாளர்களின் உதவியின்றி எடுக்கப்படும் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1.7 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவின் தொழில்நுட்ப நகரமான ஷென்செனில் இன்று முழுமையான லாக் டவுன் தொடங்கியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் திங்களன்று சீல் வைக்கப்பட்டு பல குடியிருப்பு பகுதிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன, ஏனெனில் முழு லாக்டவுனை தவிர்த்து பகுதி லாக்டவுன் அமல் படுத்தப்பட்டுள்ளளது. இந்த நகரில் இன்று சுமார் 170 புதிய வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டோங்குவான் நகரத்தில் இன்று முதல் பேருந்துகள் மற்றும் சுரங்கப்பாதை நெட்வொர்க் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் தொடக்கத்தில் இருந்து இந்த மாகாணத்தில் குறைந்தது ஐந்து நகரங்கள் லாக்டவுனுக்கு ஆளாகி வருகின்றன. இதில் சாங்சுனின் முக்கிய தொழில் பகுதியில் சுமார் 90 லட்சம் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் தீவிரமாகியுள்ளது.