ஜம்மு: புவிசார் குறியீடு (ஜிஐ) பெற்ற காஷ்மீர் தரை விரிப்புகள் முதன்முறையாக ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இத்தகைய விரிப்புகள் அடங்கிய கன்டெய்னர் டெல்லியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜெர்மனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மத்திய வர்த்தகத்துறை செயலர் ரஞ்சன் பிரகாஷ் தாகுர், ஏற்றுமதி பெட்டகத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தரை விரிப்பு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (சிஇபிசி) ஜம்மு காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறி இயக்குநரகத்துடன் இணைந்து புவிசார் குறியீடு பெற வேண்டியதன் அவசியம் குறித்து டெல்லியில் விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இவ்விதம் ஜிஐ குறியீடு பெறுவதால் அவை காஷ்மீரிலிருந்து மட்டும்தான் வருகிறது என்ற தனித்துவமான அடையாளம் பெறும் என்பதும் விளக்கப்பட்டது.
ஜிஐ குறியீடுடன் கியூஆர் கோடும் இணைத்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிப்புகளின் நம்பகத் தன்மைக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும். கைவினை தரை விரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்று இயக்குநர் மெக்மூத் அகமது ஷா தெரிவித்தார்.
இந்த முயற்சியின் விளைவாக கைவினை தரை விரிப்புகள் தயாரிப்பு மேம்படும். ஈரான் மற்றும் துருக்கியிலிருந்து தயாராகி வரும் தரை விரிப்புகளுடன் போட்டியிட இது உதவும் என்றும் அதற்குரிய அங்கீகாரமாக ஜிஐ குறியீடு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2016-ம் ஆண்டு மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புவிசார் குறியீடு பதிவுத்துறை காஷ்மீர் தரை விரிப்புகளுக்கு ஜிஐ அங்கீரம் அளித்தது. ஆனால் இப்போதுதான் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அம்மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.
கைத்தறி தரை விரிப்பு உற்பத்தியாளர்களின் நலனை இது பாதுகாக்கும் என்று அப்துல் மஜீத் சோபி என்ற கலைஞர் தெரிவித்தார்.
காஷ்மீர் தரை விரிப்புகள் 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.115 கோடி மதிப்பிலான கம்பளம் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.