நாகர்கோவில்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து அங்கு போர் காரணமாக தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். காரணம் ஏற்கனவே தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் தேர்வுகள் எழுதி பல்வேறு கட்டங்களை கடந்து மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர்.
எனவே உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது இயலாத காரியம் என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களது கல்வி தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும். அரசியலுக்காக இடம் தருவேன் என்று கூறிவிட்டு செய்ய முடியாமல் போனால் அது பயனற்றது.
தமிழகத்தில் சட்டம்ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக தி.மு.க. இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. சிறப்பான அறிவிப்பு, இதுதான் உண்மையான ஜனநாயகம்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள்-மாணவர்கள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.