மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து இரண்டு கவுன்சிலர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் அனுபம் தத்தா(48). இரண்டு முறை பன்னிஹாட்டி பகுதியின் கவுன்சிலராக இருந்துள்ளார். தனது செல்லப்பிரணிக்கு மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இரு மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார் அனுபம் தத்தா. அதன் பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இரண்டு தோட்டாக்கள் அவரது தலை மற்றும் தோள்பட்டையில் தாக்கியதில் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
இது தொடர்பாக பன்னிஹாட்டி சட்டமன்ற உறுப்பினர் பார்த்தா பௌமிக், “கொலையாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தபன் காண்டு(52) நான்கு முறை ஜல்தா கவுன்சிலராகவும், நகராட்சியின் முன்னாள் தலைவர், துணைத் தலைவராகவும் இருந்தவர். நேற்று மாலை நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தபன் காண்டுவை தடுத்து நிறுத்தி,
அருகில் இருந்து சுட்டனர். இரண்டு தோட்டாக்கள் அவரது தலை மற்றும் கழுத்தில் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் பாக்முண்டியை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை ராஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தபன் காண்டு இறந்துவிட்டார்.
இந்த நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்ளிடம் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை. புருலியா மாவட்டத்தின் ஜல்தா நகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராவதைத் தடுக்க, எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தபன் காண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜல்டா, ரகுநாத்பூர் நகராட்சிகளில் 12 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.