மேலே பாஜக.. கீழே அதிமுக.. நடுவுல யாரெல்லாம் இருக்காங்க.. சசி தரூர் அடித்த "செல்ஃப் கோல்"!

எதிர்க்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ்தான் அதிக செல்வாக்குடன் இருப்பதாக சசி தரூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஒரு லிஸ்ட்டையும் அவர் போட்டுள்ளார்.

திரினமூல்
காங்கிரஸ்
கட்சிக்கு அவர் கொடுத்துள்ள மறைமுகமான பதிலடியாக இது பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக செயல்பட திரினமூல் முயல்வதாக ஒரு பேச்சு உள்ளது. அதேபோல அந்த இடத்தைப் பிடிக்க
ஆம் ஆத்மி
கட்சியும் முயல்வதாகவும் ஒரு பேச்சு உள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு டிவீட் போட்டுள்ளார் சசி தரூர்.

உண்மையில் இந்த லிஸ்ட்டைப் பார்த்து காங்கிரஸ் மகிழ்ச்சி அடையக் கூடாது.. மாறாக நிறைய சிந்திக்க வேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் நாங்கதான் நம்பர் 1 என்று சொல்வதில் என்ன பெருமை இருந்து விட முடியும். ஆளும் கட்சியாக நீண்ட நெடுங்காலம் கோலோச்சி வந்த காங்கிரஸ் இன்று எதிர்க்கட்சிகளிலேயே நம்பர் ஒன் என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொள்ளும் நிலைக்குப் போய் விட்டதை பெருமையாக எப்படி கருத முடியும்?

சசி தரூர் கொடுத்துள்ள அந்த லிஸ்ட்டில், 1443 எம்எல்ஏக்களுடன்
பாஜக
முதலிடத்தில் இருக்கிறது. 753 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் 2வது இடத்தில் இருக்கிறது. 3வது இடத்தில் திரினமூல் காங்கிரஸ் 236 எம்எல்ஏக்களுடன் இருக்கிறது. இவ்வளவு குறைவான இடத்தில் இருக்கிறதே திரினமூல் என்பதைத்தான் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் சசி தரூர். அதேபோல 4வது இடத்தில் 156 எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி இருக்கிறது. அடுத்த இடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. திமுக 136 எம்எல்ஏக்களுடன் தேசிய அளவில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் அதிமுக 66 இடங்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

தேசிய எதிர்க்கட்சிகள் வரிசையில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் கட்சியாக காங்கிரஸ் திகழ்வதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் சசி தரூர். அதேசமயம், கட்சி தன்னை புதுப்பித்துக் கொண்டும், சீரமைத்துக் கொண்டும் இருப்பதாகவும் அவர் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். சசி தரூர் சொல்வதெல்லாம் சரிதான். மக்கள் மத்தியில் காங்கிரஸுக்கு இன்னும் கூட நம்பிக்கை இருக்கவே செய்கிறது. ஆனால் இருக்கிற கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையும் அது ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். அதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். அப்போதுதான் இருக்கிற மக்களும் விட்டு விலகாமல் கூடவே இருப்பார்கள் என்பதையும் காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சசி தரூரின் டிவீட்டுக்கு விஜய் அஹிர் என்பவர் அளித்துள்ள பதிலில், கொள்கை அளவில் காங்கிரஸ் தோற்றுப் போகவில்லை. தேர்தல் அரசியலில்தான் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் அரசியலில் தோல்வி என்பது கூட்டணி அரசியல் என்றும் கூறலாம். எந்த ஒரு கட்சியுமே இந்தக் காலத்து அரசியலில் தனித்து நின்று சாதிப்பது என்பது கடினமான ஒன்று. சரியான கூட்டணியுடன் களம் இறங்கினால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை ஒவ்வொரு தேர்தலும் சுட்டிக் காட்டி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸும் தனது கூட்டணியை பலப்படுத்த வேண்டும், தற்போது எடுத்து வரும் கொள்கை முடிவுகளில் நிறையவற்றை மறு பரிசீலனை செய்து தெளிவுடன் நடைபோட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.