டெல்லி: பல்வேறு நாடுகளிடம் பொருளாதார தடைகளுக்கு உள்ளான ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யவும் தடை விதித்துள்ளன. இந்த தடையால் தங்களுக்கு பாதிப்பில்லை என தெரிவித்துள்ள ரஷ்யா, அந்த கச்சா எண்ணெயை பிற நாடுகளுக்கு விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ரஷ்யா. அதன் ஒரு பகுதியாக உச்சபட்ச சலுகை விலையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முவந்துள்ளது. இதனை ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய கரன்சியான ரூபிள் மதிப்பில் ரஷ்யா – இந்தியா இடையே வர்த்தகம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த வர்த்தகத்தை மதிப்பிடும் குறிப்பு நாணயமாக சீனாவின் யுவானை பயன்படுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 80% எண்ணெயை இறக்குமதி செய்து வரும் இந்தியா இதில் 2 முதல் 3 % ரஷ்யாவை நம்பியிருந்த நிலையில் அது மேலும் அதிகரிக்க உள்ளது.