ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்களை களைவதில் இந்தியா தீவிர முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயரக் கூடும் என செய்திகள் வெளியாகின. 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் விலையேற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை விலை உயர்வு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை விற்க ரஷ்யா முன்வந்துள்ள நிலையில் அதன் மூலம் சிக்கலுக்கு தீர்வு காண இந்தியா முனைந்துள்ளது. இது குறித்து இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக்குடன் பேசியிருந்தார்.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெய்க்கு எந்த முறையில் பணம் செலுத்துவது என்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் அமெரிக்க டாலர் அல்லது ஐரோப்பிய யூரோவில் பணம் செலுத்த முடியாது என்பதால் இந்திய ரூபாயில் செலுத்துவது குறித்து ரஷ்யாவுடன் வெளியுறவுத்துறை பேசி வருகிறது. இது குறித்த முடிவு இன்னும் ஒரு வாரத்தில் எட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்கும் விதமாக அவற்றின் மீதான வரியை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 100 குண்டுகள்… ரஷ்யா தாக்குதலில் மரியுபோல் நகரில் 2,100 பேர் உயிரிழப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM