புதுடெல்லி: டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான, ‘பாரத்பே’ நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் அஷ்னீர் குரோவர். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார். இவருடைய மனைவி மாதுரி ஜெயின் குரோவர், பாரத்பே நிர்வாக குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இவர் தனது நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், பங்கு சந்தையில் ஊழல் செய்ததாகவும் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தனது வீட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள டைனிங் டேபிளை செய்து, கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக கடந்த வாரம் பரபரப்பு தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, மாதுரியும், குரோவரும் தங்கள் பதவிகளில் இருந்து விலகினர்.இந்நிலையில், குரோவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நான் கின்னஸ் சாதனை படைத்த டைனிங் டேபிளை வைத்திருக்கவில்லை. அப்படி செய்யும் எண்ணமும் எனக்கு இல்லை. ரூ.10 கோடியில் டைனிங் டேபிள் செய்வதாக இருந்திருந்தால், அந்த பணத்தை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பயன்படுத்தி இருப்பேன். பாரத்பே நிர்வாக குழுவில் இருந்து வெளியாகும் பொய் தகவல்களை நம்பாதீர்கள். அப்படி செய்தால், நீங்களும் அவர்களை போலவே நம்பகத்தன்மையை இழந்து விடுவீர்கள்,’ என்று கூறியுள்ளார். மேலும், இதனுடன் தனது வீட்டில் பயன்படுத்தப்படும் டைனிங் டேபிளின் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.