வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைக்க வேண்டும்- வைகோ வேண்டுகோள்

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த் தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதிகளுக்கு வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக அப்பகுதி மக்களால் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வந்த இராமநதிஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம், திமுக அரசின் விரைவான செயல்பாட்டின் காரணமாக நிலம் கையகப்படுத்துதல் நிலையை அடைந்துள்ளது.

மேலும் இத்திட்டத்தில் நிலம் கையப்படுத்துதல் பணிகளுக்காக அரசுப் பணியாளர்கள் நியமனமும், அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான ஆணை மற்றும் ஓராண்டு திட்டத்திற்கான கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களிடையே அரசு மீதான நன்மதிப்பை உயர்த்தி உள்ளது.

இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மேலே குறிப்பிட்டவாறு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகள் படி, வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகிறது. வனம் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

எனவே, வன உயிரின நலக் குழுவிற்கு, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகளின் படி தேவையான தகுதியான உறுப்பினர்களை நியமித்து, இராமநதிஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களுக்கு தடையின்மைச் சான்று வழங்கிட வேண்டுகிறேன்.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு 10.03.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.