பெங்களூரு: முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி, பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் சர்ச்சை குறித்த விவகாரம் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அரசு மற்றும் எதிர் தரப்பு விவாதம் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் நீதிபதி காஜி ஜெய்புன்னிசா மொகிதீன் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு வெளியாகுவதை முன்னிட்டு பெங்களூரு முழுவதும் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டங்கள், கொண்டாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநகர கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.