பெங்களூரு: ஹிஜாப் வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவிதுண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பிறகு விசாரணை முடிந்து தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. இந்த நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நாளை காலை 10.30 மணி அளவில் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், கர்நாடகாவில் தற்போதே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக வரும் 21ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் அம்மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.