அகமதாபாத்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பொதுக்குழு குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் பிரானா என்ற கிராமத்தில் 11-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் நாடு முழுவதிலும் இருந்து 1,248 நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக் குழுவுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கரோனா காரணமாக நின்று போன சங்கப் பணிகளில் 98.6% மீண்டும் துவங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள 59,000 மண்டலங்களில் 41% மண்டலங்களில் கிளைகள் செயல்படுகின்றன. 2,303 நகரங்களில் 94% நகரங்களில் கிளைகள் செயல்படுகின்றன. அனைத்து நகரங்களிலும் ஆர்எஸ்எஸ் கிளை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் கிராமங்கள் அளவில் கிளைகள் அமைக்கப்படும். 10 முதல் 12 கிராமங்கள் வரை கொண்ட ஒரு வட்டாரத்தில் குறைந்தது ஒரு ஆர்எஸ்எஸ் கிளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் கிளைகளில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு உடற்பயிற்சி, சுயகட்டுப்பாடு, தொண்டு மனப்பான்மை, சமூக விழிப்புணர்வு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 5.50 லட்சம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கரோனா தடுப்பு பணியில் ஈடு பட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் 1.25 லட்சம் இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறு மன்மோகன் வைத்யா கூறினார்.