CM Stalin laying foundation stone to DLF DownTown IT Campus: சென்னை தரமணியில், ரூ 5000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மூலம் 70000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் அமையவுள்ள டி.எல்.எஃப் டௌண்டவுன் வளாகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.5000 கோடி முதலீட்டில், 6.8 மில்லியன் சதுர அடியில், 27 ஏக்கர் நிலப்பரப்பில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸின் உலகளாவிய மிகப்பெரிய வளாகம் சென்னை தரமணி டி.எல்.எஃப் டௌண்டவுனில் அமையவுள்ளது. இந்த திட்டம் சுமார் 70,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் இன்று (14.03.2022) டி.எல்.எஃப் டௌண்டவுன் தரமணியில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸின் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு முயற்சி செயல்திட்டத்தில், ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது, 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.
ரூ.5000 கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல் திட்டத்தில், டி.எல்.எஃப் நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் கால கட்டங்களில் முதலீடு செய்யும்.
இந்த டி.எல்.எஃப் டௌண்டவுன் வளாகம், பணியாளர்களுக்கு என நலவாழ்வு மையம், உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்ட அரங்குகள், பிரத்யேக உணவுக்கூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. இவ்வளாக கட்டடம், பாரம்பரியமாகவும், அலுவலகங்களில் இருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான, சிறப்பான மாற்று அமைவிடங்களையும் கொண்டு அமைக்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்: கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய எஸ்.பி.வேலுமணி; வைரல் வீடியோ
மேலும் இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும், சமூக கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது.
மேற்சொன்ன இத்தனித்துவமான வளாகத்தில், 1 மில்லியன் சதுர அடி பரப்பளவுள்ள கட்டடத்தில், ஏறக்குறைய 7.7 லட்சம் சதுர பரப்பு அமைவிடத்திற்கு, டிட்கோ – டி.எல்.எஃப் கூட்டு முயற்சி நிறுவனம், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் உடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.
செயல்படுத்தப்பட்டு வரும் இந்த டௌண்டவுன் திட்டமானது, சுமார் 70,000க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும். இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல்திட்டங்கள், ஒரு டிரில்லியன் SGDP (மாநில அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி)என்ற இலக்கை 2030-ம் ஆண்டிற்குள் எட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு வாய்ப்புகளை வழங்கும். என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“