366 கோடீஸ்வரர்கள்.. 205 "கிரிமினல்கள்".. 80 வயசு தாத்தா 2 பேர்.. கலகலக்கும் உ.பி.சட்டசபை!

உத்தரப் பிரதேச சட்டசபை வழக்கம் போல கோடீஸ்வரர்களும், கிரிமினல்களும் நிரம்பிய சபையாக காட்சி தருகிறது. தேர்தல்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும், இந்த காட்சிகள் மட்டும் எப்போதுமே மாறுவதில்லை. மாறாக தேர்தலுக்கு தேர்தல் இது அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

உத்தரப் பிரதேச சட்டசபைக்கு புதிதாக 403 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 51 சதவீதம் பேர் அதாவது 205 பேர்
கிரிமினல் பின்னணி
கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2017ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். 2017 சட்டசபைத் தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 402 உறுப்பினர்களில் 36 சதவீதம் பேர் அதாவது 143 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்களாக இருந்தனர்.

வெற்றி பெற்றவர்களில் 39 சதவீதம் பேர் அதாவது 158 பேர் கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். இது கடந்த 2017 தேர்தலன்போது 26 சதவீதமாக இருந்தது.

5 எம்எல்ஏக்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 29 எம்எல்ஏக்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் ஆவர். இந்த ஆறு பேரில் ஒருவர் பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்டு வழக்கு போடப்பட்டவர் ஆவார்.

கிரிமினல் வழக்குகளைச் சுமந்து நிற்கும் எம்எல்ஏக்களில், பாஜகதான் அதிகம். 255 பாஜக எம்எல்ஏக்களில் 44 சதவீதம் பேர் அதாவது 111 பேர் கிரிமினல் வழக்குகளை சுமப்பவர்கள் ஆவர். சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் 111 பேரில் 71 பேரும், ஆர்எல்டி எம்எல்ஏக்கள் 8 பேரில் 7 பேரும், சுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் 6 பேரில் 4 எம்எல்ஏக்களும், நிர்பல் இந்தியன் சோசிட் ஹமாரா ஆம் தள் கட்சியின் 6 எம்எல்ஏக்களில் 4 பேரும், அப்னாதளம் சோனிலால் பிரிவின் 12 பேரில் 3 எம்எல்ஏக்களும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்.

ஜன் சத்தா தளம் லோக்தந்திரிக் என்ற கட்சிக்கு 2 பேர் கிடைத்துள்ளனர். இந்த இரண்டு பேருமே கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்பது அதிர்ச்சிகரமானது. அதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பேரும், பகுஜன் சமாஜ் சார்பில் வென்ற ஒருவரும் கூட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்தான்.

ஒருபக்கம் இப்படி கிரிமினல்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் என்றால் மறுபக்கம் கோடீஸ்வரர்களும் குவிந்து கிடக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 403 பேரில் 366 பேர்
கோடீஸ்வரர்கள்
ஆவர். கடந்த தேர்தலில் இது 322 ஆக இருந்தது. இப்போது கூடுதலாகியுள்ளனர்.

பாஜகவிலிருந்துதான் அதிகபட்ச கோடீஸ்வரர்கள் தேர்வாகியுள்ளனர். அக்கட்சியின் எம்எல்ஏக்களில் 91 சதவீதம் பேர் அதாவது 233 பேர் கோடீஸ்வரர்கள்தான். சமாஜ்வாடிக் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரும், காங்கிரஸ் கட்சியின் 2 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருவரும் கோடீஸ்வரர்கள்தான். உ.பி. தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பே ரூ. 8.06 கோடி என்ற அளவில் உள்ளது. இது கடந்த 2017 தேர்தலின்போது ரூ. 5.92 கோடியாக இருந்தது.

2022 தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள உ.பி. சட்டசபையில் 50 வயதுக்கு மேற்பட்டோர்தான் அதிகம். அதாவது 58 சதவீதம் பேருக்கு 51 முதல் 80 வரையிலான வயது கொண்டவர்கள் ஆவர். 42 சதவீதம் பேருக்கு 25 முதல் 50 வரையிலான வயது உள்ளது. 2 பேருக்கு 80க்கும் மேற்பட்ட வயதாகும்.

இப்படி கிரிமினல்கள், தாத்தாக்கள், கோடீஸ்வரர்கள் நிரம்பியுள்ள உ.பி. சட்டசபையில் பெண்கள் மட்டும் மிக மிக குறைவாக உள்ளனர். அதாவது 403 எம்எல்ஏக்களில் 47 பேர்தான் பெண்கள். 2017ல் இந்த எண்ணிக்கை 40 ஆக இருந்தது. இப்போது 7 பேர் கூடுதலாக கிடைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.