பாரீஸ்,
உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அதே வேளையில், கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ்களாக பரவி வருவதால், பல நாடுகளில் 3-வது டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இன்னும் சில நாடுகள் 2-வது பூஸ்டர் அதாவது, 4-வது டோஸ் தடுப்பூசியில் கவனம் செலுத்தி வருகின்றன. இஸ்ரேலில் ஏற்கனவே 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரான்சில் இன்று முதல் 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக, பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும், நேற்று ஒரே நாளில் அங்கு 72 ஆயிரத்து 443 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.