என் வயது 27. எனக்கு எப்போதுமே இர்ரெகுலர் பீரியட்ஸ்தான். திருமணமாகி 2 வருடங்களாகியும் கருத்தரிக்கவில்லை. இர்ரெகுலர் பீரியட்ஸுக்கும் கருத்தரிக்காததற்கும் ஏதேனும் தொடர்புண்டா?
– ஸ்வேதா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
“முறையற்ற மாதவிடாய் சுழற்சி எனப்படும் இர்ரெகுலர் பீரியட்ஸுக்கும் கர்ப்பம் தரிக்காததற்கும் தொடர்பு உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். இர்ரெகுலர் என்றால் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை உங்களுக்கு பீரியட்ஸ் வருகிறது என்ற விவரம் இல்லை. பொதுவாக 21 நாள் முதல் 35 நாள்களுக்குள் பீரியட்ஸ் வந்தால் அது நார்மல் என்றே கணக்கில் கொள்ளப்படும். எனவே 21 நாள்களுக்கு முன்பாகவோ, 35 நாள்களுக்கு பிறகோ வரும் பீரியட்ஸ் சுழற்சியை இர்ரெகுலர் என்று சொல்கிறோம்.
பீரியட்ஸ் முறையாக வந்துகொண்டிருக்கிறது என்றாலே உங்களுக்கு கருமுட்டை வெளியேறுவது சரியாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் கருமுட்டை வெளியேறுதில் சிக்கல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும்.
இர்ரெகுலர் பீரியட்ஸால் கருமுட்டை வெளியேறுவதும் பாதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பது தாமதமாகலாம், தள்ளிப்போகலாம்.
அதே நேரத்தில் உங்களுடைய இர்ரெகுலர் பீரியட்ஸ் பிரச்னைக்கு தைராய்டு பாதிப்பு, பிசிஓடி போன்ற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையும் காரணமா என்பதையும் மகப்பேறு மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஒரு ஸ்கேன் எடுத்துப்பார்த்து உறுதிசெய்து கொள்வது நல்லது.
அடுத்து உங்கள் எடையையும் கண்காணிக்க வேண்டும். உங்கள் பிஎம்ஐ (BMI) அளவுக்கு அதிகமான எடையில் இருக்கிறீர்களா என்பதைப் பார்த்து ஒருவேளை அப்படியிருப்பின் எடையைக் குறைத்து சரியான அளவுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம். முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் விஷயத்தில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் கருத்தரிக்க இயலாத பிரச்னையையும் சரிசெய்ய முடியும்.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?