பல ஆண்டுகளாக யூடியூப் பிரியர்களுக்கு விளம்பரமில்லா அனுபவத்தை வழங்கி வந்த Youtube Vanced செயலி, தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சட்ட ரீதியான காரணத்தை சுட்டிக்காட்டி, Youtube Vanced செயலியை உருவாக்கியவர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
Youtube Vanced சேவையை நிறுத்திக்கொள்வதாக நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், நாங்கள் சேவையை நிறுத்திக் கொள்கிறோம். இனி வரும் நாள்களில் எங்கள் செயலியை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கிடைக்காது. நீங்கள் கேட்க விரும்பாத ஒரு தகவல்தான் இது. ஆனால் நாங்கள் செய்ய வேண்டிய தேவை. இத்தனை வருடங்கள் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்று என பதிவிட்டுள்ளனர்.
The Verge இன் அறிக்கையின்படி, Vanced செயலி உரிமையாளர்களுக்கு, சேவையை உடனடியாக நிறுத்தும்படியும், செயலியை மேம்படுத்தக்கூடாது எனவும் Google சார்ப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், YouTube’க்கான அனைத்து குறிப்புகளையும் அகற்ற வேண்டும், லோகோவை மாற்ற வேண்டும், யூடியூப் தயாரிப்புக்கு சம்பந்தமான அனைத்தையும் அகற்றுப்படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ராய்டு பயனர்கள் மத்தியில் Vanced மிகவும் பிரபலமான செயலியாக இருந்தது. இந்த செயலி, ப்ரீமியம் அக்கவுண்ட் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க உதவியது.
இதுதவிர, AMOLED டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களில், யூடியூப் Vanced செயலியை பிளாக் தீமில் உபயோகிப்பது மட்டுமின்றி பல வசதிகளை வழங்கியது. இது, விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டி வந்த யூடியூப் நிறுவனத்துக்கு சிக்கலாக இருந்து வந்தது.
கூகுள் பிளே ஸ்டோரில் Vanced செயலி கிடைக்கவில்லை என்றாலும், பயனாளர்கள் தனியாக பிரவசர் வாயிலாக Vanced செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்.
சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானாலும், Vanced-இன் தற்போதைய பதிப்பு தொடர்ந்து வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித புதிய அப்டேட்களும் இனி கிடைக்காது. தற்சமயம், ஸ்மார்ட்போனில் Youtube Vanced செயலி வைத்திருப்பவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை உபயோகிக்கமுடியும். அதன் பின், செயலி வெர்ஷன் காலாவதியாகிவிடும்.