நியூயார்க்: அமெரிக்காவில் ஆசியப் பெண் ஒருவரை இனவெறி கொண்ட நபர் ஒருவர் 125 முறை தாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பையும் , சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் யான்கர்ஸ் எனும் பகுதியில், 67 வயதான ஆசியப் பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற 42 வயதான டம்மால் எஸ்கோ என்ற அமெரிக்கர், அப்பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த்தியுள்ளார்.
வயது முதிர்ந்தவர் என்றுகூட பாராமல் அப்பெண்ணை 125 முறை தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
இதன் அடிப்படையில் எஸ்கோ தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து நியூயார்க் சிட்டி போலீஸார், “ ஆசியப் பெண்ணுக்கு நடந்தது கொடூரமான இன வெறுப்புக் குற்றம். இது நாங்கள் பார்த்த மிக பயங்கரமான தாக்குதல்களில் ஒன்றாகும். ஆதரவற்ற ஒரு பெண்ணை அடிப்பது வெறுக்கத்தக்கது. அவரது இனத்தின் காரணமாகவே அவர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.கைது செய்யப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
அப்பெண்ணுக்கு முகத்தில் எழும்பு முறிவும் மற்றும் மூளையில் ரத்த கசிவும் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை யான்கர் நகர மேயர் மைக் ஸ்பேனோவும் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து மைக் ஸ்பேனோ பேசும்போது, “குற்றஞ்சட்டாப்பட்டவருக்கு சட்டத்திற்கு உட்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணோடும், அவரது குடும்பத்தினரோடும் நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.