பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இது தொடர்பான உரிய வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பணியின் போது செல்போனில் வீடியோ எடுத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அலுவலக நேரத்தில் ஊழியர்கள் செல்போனை பயன்படுத்தி எடுக்கும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்படுவதாக கூறிய நீதிபதி, அலுவலக பயன்பாட்டுக்கென தனி செல்போன், தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் அரசு ஊழியர் விதிப்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வழிகாட்டுதலை உருவாக்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமெனவும், இந்த உத்தரவை 4 வாரங்களில் நிறைவேற்ற வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.