சென்னை: தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி ஊக்கத் தொகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கான திறன் போட்டிகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா ஸ்கில்ஸ் இறுதிப் போட்டிகள்கடந்த ஜன.6 முதல் 10-ம் தேதிவரை டெல்லியில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் சார்பில் துறைவாரியாக பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்ட 36 பேர், பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்றனர். இவர்கள் இதுவரை இல்லாத வகையில் 2 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம், 5 சிறப்புப் பதக்கம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்றது இதுவே முதல் முறையாகும். இப்போட்டிகளில் வென்றவர்களை ஊக்குவிக்கும் வகையில்,அவர்களுக்கு ஊக்கத் தொகைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முத்லவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தங்கப்பதக்கம் வென்ற ஏ.அனுஸ்ரீ, சுபாசிஸ் பால் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம், வெள்ளிப்பதக்கம் வென்ற எம்.காளிராஜ், சி.கார்த்தி, எஸ்.தாட்சாயணி, பி.வி.சரஸ்வதி, ஆர்.ஜெ.பிரகதீஸ்வரன், எஸ்.விஷ்ணுபிரியா ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்ற எம்.ஜெ.அபர்ணா, பி.லோகேஷ், கே.அஜய் பிரசாத், வி.லோகேஷ், எஸ்.ஜெகன், என்.ஆர். பிரகதீஷ், ஆர்.தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு, ஸ்கில் ஒலிம்பிக்ஸ் எனப்படும் உலகஅளவிலான திறன் போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இப்போட்டிகள் வரும் அக்டோபரில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்க உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.28.08 கோடியில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகள், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.56.48 கோடியில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகள் ஆகியவற்றையும் காணொலிகாட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், சிவ.வி.மெய்யநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, இளைஞர் நலத்துறை செயலர் அபூர்வா,தொழிலாளர் நலத்துறை செயலர்ஆர்.கிர்லோஷ் குமார், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் – செயலர் ஆனந்தகுமார்,திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் இன்னசன்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.