“இனி விளையாட முடியாது”… ஓய்வை அறிவித்தார் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் சோகம்


பிரபல இலங்கை வீரர்  சுரங்கா லக்மல் இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் பெங்களூருவில்பகலிரவு போட்டியாக நடைபெற்ற  2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனிடையே இந்த போட்டியுடன் இலங்கை வீரர் சுரங்கா லக்மல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர் இதுவரை 86 ஒருநாள் போட்டிகளிலும், 70 டெஸ்ட் போட்டிகளிலும், 11 டி20 போட்டியிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 171, ஒருநாள் கிரிக்கெட்டில் 109 , டி-20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய சுற்றுப் பயணத்திற்கு முன்னதாகவே தான் இந்த டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது 35 வயதாகும் தன்னால் இன்னும் 2 ஆண்டுகள் கூட கிரிக்கெட் விளையாட முடியும் என கூறியுள்ள லக்மல், இந்த இரண்டு ஆண்டுகளில் நான் விளையாடுவதை விட என்னுடைய இடத்தில் ஒரு இளம் வீரர் வந்து விளையாடுவதை தான் சிறப்பாக கருதுவதாக கூறியுள்ளார்.

மேலும் நிச்சயம் இலங்கை அணி எதிர்காலத்தில் நல்ல வீரர்களை ஊக்குவித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தான் நம்புவதாக சுரங்கா லக்மல் கூறியுள்ளார்.  2வது டெஸ்ட் போட்டி நிறைவடையும் போது அவருக்கு இந்திய,இலங்கை வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் லக்மலுக்கு பிரியாவிடை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.