உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம் கவனத்தில் கொள்ளப்படும் என்றுமக்களவையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். உக்ரைனுக்கு மீண்டும் திரும்பிசெல்ல முடியாத நிலையில் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். உக்ரைனில் இருந்து நாடுதிரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. உக்ரைனின் அண்டை நாடுகளில் இந்த மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா, மத்திய அரசின் கொள்கை என்ன என்று அவர் கேள்வி கேட்டார்.
இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் ‘ஆபரேஷன் கங்கா’ மூலம் உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக பிரதமர் மோடியைபாராட்ட இந்த அவை கடமைப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
மாநிலங்களவையில் இதே விவகாரத்தை பிஜு ஜனதா தளம் எம்.பி. அமர் பட்நாயக் எழுப்பினார். அவர் கூறும்போது, இந்தியாவில் செயல்படும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 5 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். அந்த இடங்களில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவியர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கூறும்போது, “இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்பி செல்ல முடியாது. அவர்களின் எதிர்காலம் குறித்த கொள்கைகளை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்”என்றார். – பிடிஐ