ஹைதராபாத்: மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் சென்று போர் பாதிப்பினால் நாடு திரும்பியுள்ள தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர்களின் படிப்பிற்கு மாநில அரசு உதவும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து, இந்திய அரசு 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை உக்ரைனில் இருந்து சொந்த நாட்டு திருப்பி அழைத்து வந்தது. அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் படிப்பதற்காக அங்கு சென்றவர்கள். அவ்வாறு சென்ற இந்திய மாணவர்கள் பிப்ரவரியின் இறுதியில் அங்கு போர் தொடங்கிய நிலையில் போதிய உணவு, தண்ணீர், தங்க இடம் இன்றி தவித்து வந்தனர். அவர்களில், கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் ரஷ்யத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்திய மாணவர்கள் நாடு திரும்பிய பின்னர், அவர்களின் படிப்பினைத் தொடர்வது குறித்தும், ஏன் அதிகப்படியான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர் என்ற விவாதம் எழுந்தது.
“இந்தியாவில் போட்டித் தேர்வுகளில் தகுதி பெறத் தவறிய மாணவர்களே வெளிநாடு சென்று படிக்கிறார்கள்” என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது.
இந்தநிலையில், தெலங்கான மாநில சட்டப்பேரவையில் நடந்த நீண்ட விவாதத்திற்கு பின்னர், முதல்வர் சந்திரசேகர ராவ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், மாநிலத்தைச் சேர்ந்த 740 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்ததாகவும், அவர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்கள் படிப்பைத் தொடர மாநில அரசு உதவும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம் என்று தெரிவித்தார்.