டெல்லி: பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை மீட்பது சாத்தியமானது என மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். அதனையடுத்து பேசிய அவர், உக்ரைனில் சிக்கியிருந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்தனர். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் 20,000-க்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் இந்தியர்கள் மட்டுமன்றி, பிற வெளிநாட்டினரையும் உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம். போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன என அவர் கூறினார். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. அதே சமயம் இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அதனையடுத்து பேசிய அவர், கடும் சவால்களுக்கு மத்தியில் மாணவர்களை தாயகம் அழைத்து வந்துள்ளோம். இந்தியார்கள் மீட்புப் பணிகள் தொடர்பான கூட்டங்களை பிரதமர் மோடி ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தினார். மேலும் உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடலை இந்தியா கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன என்று தெரிவித்தார். அதே சமயம் உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் போரில் காயமடைந்த மாணவர், அங்கிருந்து மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டார். மேலும் மாணவர்களை மீட்பதற்கு பல தன்னார்வலர்களும் உதவி செய்தனர். உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதும், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதும் சவாலாக இருந்தது என அவர் கூறினார். உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்பதற்காக அந்நாட்டில் பிரத்யேக ரயிகள் இயக்கப்பட்டன. மாணவர்களை மீட்டும் பணியின் போது வான்வழி தாக்குதல், ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன. மேலும் உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்தியர்களை அண்டை நாடுகள் மிகுந்த மதிப்புடன் நடத்தின. போர் உக்கிரமாக நடைபெற்ற கிழக்கு உக்ரைனிலேயே பெரும்பாலான மாணவர்கள் சிக்கியிருந்தனர் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.