நியூயார்க்: உக்ரைன் – ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வந்தநிலையில் சீனாவில் கரோனா லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேவை குறைந்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது .
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. பின்னர் இதன் விலை 110 டாலர்களாக உயர்ந்தது. தொடர்ந்து முன்பேர வர்த்தகத்தில் 118 டாலர், 130 டாலர் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதல் தொடங்கிய பிறகு தற்போது 40% வரை உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் சீனாவில் கடந்த சில நாட்களக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர லாக்டவுன்களையும் சீனா அமல்படுத்தி வருகிறது. மக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் பெட்ரால் -டீசலின் தேவை கணிசமாக குறைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 7 டாலர்கள் குறைந்தது. ப்ரெண்ட் 6.78 டாலர் அல்லது 6% குறைந்து, 1358 ஜிஎம்டியில் ஒரு பீப்பாய் 105.89 டாலர் ஆகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் 7.01 டாலர்களாகவும் அல்லது 6.4% குறைந்து 102.32 டாலர்களாகவும் இருந்தது.
இதுகுறித்து யுபிஎஸ் ஆய்வாளர் ஜியோவானி ஸ்டானோவோ கூறுகையில் ‘‘போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அறிகுறிக்கு இடையே ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தால் இந்த வாரம் எண்ணெய் விலைகள் மிதமாகத் தொடரக்கூடும். ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி மார்ச் மாதத்தில் இதுவரை ஒரு நாளைக்கு 11.12 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான புதிய பேச்சுவார்த்தைகளைத் தவிர, சீனாவில் புதிய லாக்டவுன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன்’’ எனக் கூறினார்.