டெல்லி: பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் கட்சி ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார். ஒரு புறம் பெண்களின் உரிமை மற்றும் மேம்பாடு பற்றி பேசும் நாம், மற்றோரு புறத்தில் அவர்கள் என்ன அணிய வேண்டும் என்பதற்கான சிறு உரிமையை கூட தருவதில்லை என்று கூறினார். இந்த உரிமையில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது என்றும் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த மதத்தையும், கலாச்சாரத்தையும் மீறுகிறது என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். இந்த தீர்ப்பு இஸ்லாமிய பெண்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இஸ்லாமிய பெண்கள் இனி குறிவைக்கப்படுவார்கள் எனவும் ஒவைசி அச்சம் தெரிவித்துள்ளார். ஆனால் ஹிஜாப்க்கு எதிரான இந்த தீர்ப்பை நான் வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார். கல்வி நிலையத்தில் உள்ள சீருடை அமைப்பை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்களை மதம், சாதி அல்லது நம்பிக்கை ரீதியாக பிளவுபடுத்த கூடாது என்றும் ரேகா கூறியுள்ளார். ஹிஜாப் அணிதல் என்பது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறைகளில் ஒன்று இந்த வழக்கின் மனுதாரர் தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் கூறியுள்ளார். இது மோசமான தீர்ப்பு என்று கூறியுள்ள வழக்கறிஞர் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், கூறியுள்ளார்.