கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ- மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்தது.
அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது.
பள்ளி, கல்லூரிக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. எனவே ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என கர்நாடக ஐகோர்ட் இன்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தற்போது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. யாத்கீர் மாவட்டம் கெம்பாவி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் ஹிஜாப் நீக்கிவிட்டு தேர்வு எழுதமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து தேர்வு அறையில் இருந்து வெளியேறிய சம்பவம் நடைபெற்றுள்ளயுது.
இதுகுறித்து யாத்கீர் மாவட்ட உயர்நிலை பள்ளிக்கான துணை இயக்குர் கூறுகையில் ‘‘இந்த பள்ளியில் ஏற்கனவே ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிற்குப் பிறகு, மாணவிகளிடம் இதுகுறித்து விளக்கம் அளித்து சமாதானப்படுத்தினோம். அப்போது அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், இன்று ஹிஜாப்பை நீக்க மறுத்து தெரிவித்து, தேர்வு எழுதாமல் சென்று விட்டனர்’’ என்றார்.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… மந்திரிகளின் தனி உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் ஏன்? கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி