புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தேசிய பங்குச் சந்தையின் தலைவராக இருந்தபோது சித்ரா ராமகிருஷ்ணன் (59), இமயமலை யோகி-யின் அறிவுரைப்படி செயல்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த பங்குச் சந்தை தரகர் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் 4 ஆண்டுவிசாரணைக்குப் பிறகு சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ கைது செய்தது. முன்னதாக என்எஸ்இ-யில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையிலும் அவரை சிபிஐ கைது செய்தது.
தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு சித்ரா ராமகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும், சித்ரா ராமகிருஷ்ணன் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் எனவும், அவரை ஜாமீனில் விடுவிப்பதுவிசாரணையை பாதிக்கும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இருப்பினும் பகவத் கீதை, அனுமன் சாலிசா மற்றும் வழிபாட்டு புத்தகங்களை எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
– பிடிஐ