எமன் VS வடை! |புத்தம் புது காப்பி #MyVikatan

Scene 1

இந்த கதை எமலோகத்தில் தொடங்குகிறது எமலோகத்தின் கதவுகள் திறக்கிறது அப்போது ஒரு புத்தகம் புயல் வேகத்தில் பறந்து வந்து சித்திரகுப்தனின் மேசைமீது விழுகின்றது பதறிப்போன சித்திரகுப்தன் நிமிர்ந்து பார்க்க, அங்கே எமதர்மன் மிகுந்த கோபத்துடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்

சித்திரகுப்தன் (பதற்றமாக): என்னாயிற்று பிரபு !

எமதர்மன் (கடுப்பாக): என்ன ஆயிற்றா ! ஆறு மாத காலமாக சிவபெருமானிடமும் பிரம்மதேவரிடம் Monthly ஆடிட்டிங்கில் திட்டு வாங்குவதே எனக்கு வாடிக்கையாகிவிட்டது ! இன்று ஒருபடி மேலே போய் கொடுத்த வேலையை செய்ய முடியவில்லை என்றால் பேப்பர் போட்டுவிட்டு கிளம்பு என்று அவர்கள் சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது இதற்கெல்லாம் காரணம் முடிக்கப்படாமல் இருக்கும் அந்த இரண்டு கணக்குகள்தாம்!

சித்ரகுப்தா கணக்கு முடிக்கும் வேலையை நாம் ஆட்டோமேடிக் செய்த இந்த மூன்று வருடங்களில் இப்படி ஒரு தவறு நிகழ்ந்ததே இல்லை. அப்படி இருக்க இந்த இரண்டு கணக்குகள் மட்டும் முடியாமல் இருக்க என்ன காரணம் ?

சித்திரகுப்தன் (குழப்பமாக): அதுதான் பிரபு எங்களுக்கும் தெரியவில்லை! நாங்களும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம். கொரோனாவைக் கூட அந்தப் பக்கம் அனுப்பி பார்த்தோம், அப்படியிருந்தும் அந்த கணக்குகளை ஒன்றும் செய்ய இயலவில்லை!

எமதர்மன் (தீர்க்கமாக): இது வேலைக்காகாது! இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. நானே களத்தில் இறங்குகிறேன். நீ இப்போதே அந்த முதல் கணக்கு இருக்கும் இடத்தை தேடு நாம் அங்கு கிளம்புவோம்

எமன் VS வடை

Scene 2

இந்தியாவின் முதுகெலும்புகளில் ஒன்றிலே அதாவது ஒரு கிராமத்திலே ரோட்டோரமாக நடத்தப்பட்டுவரும் ஒரு பழைய ஹோட்டல் கடை அது. அந்த கடையின் கதவுகளை திறந்து கொண்டு ஒரு 85 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் வெளியே வருகிறார். இறந்து போன தன் கணவரின் போட்டோவை வணங்கிவிட்டு தன் வியாபாரத்தை தொடங்குகிறார். அதேநேரத்தில் சித்திரகுப்தனும் எமதர்மனும் அந்த கடைக்கு மேலே வானத்தில் தோன்றுகிறார்கள்.

சித்திரகுப்தன்: அதோ அந்த பாட்டி தான் நாம் முடிக்கவேண்டிய கணக்கு பிரபு !

எமதர்மன்: இந்த பாட்டியா ! சரி ! ( In Mind voice : இதை எப்படி நிகழ்த்தலாம் ? ஒரு வாரமாக பெய்த மழையில் இந்த பாட்டியின் ஓட்டல் கடையே, இடிந்து விழும் நிலையில் தானிருக்கிறது பேசாமல் அதையே செய்து விடுவோம் ! )

(எமதர்மன் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் கண்ணைத் திறந்து தன் சக்தியை அனுப்பிய அந்த நேரம், எங்கிருந்தோ காக்கை ஒன்று பறந்து வந்து வடையை தூக்கிச் செல்ல, அதைத் துரத்திக் கொண்டு பாட்டி வெளியே ஓடி வர, கட்டடம் இடிந்து விழுந்தது ! பாட்டி தப்பித்தார் !)

எமதர்மன் (ஆச்சரியத்துடன்): சித்ரகுப்தா ! இங்கு என்ன நடக்கிறது ? இது எப்படி சாத்தியம் ? அந்த காக்கை எங்கிருந்து வந்தது ?

சித்திரகுப்தன் (சற்று விரக்தியுடன்): ஒவ்வொரு முறையும் இதுதான் எங்களுக்கும் நடந்தது பிரபு ! இந்த முறை மட்டுமல்ல இதுவரை பாட்டி காப்பாற்றப்பட்ட எல்லா நிகழ்வுகளிலும் இந்த காக்கை ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டு இருக்கிறது அதை தான் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை !

எமதர்மன்: அப்படியா ஆச்சரியம் தான் ! சரி பாட்டியின் கணக்கு அப்புறமாக பார்க்கலாம். அந்த இரண்டாவது கணக்கை தேடு ! அதை முடித்து விட்டு வருவோம்.

சித்திரகுப்தன் (சற்று நக்கலாக): எங்கும் தேட வேண்டியதில்லை பிரபு ! அந்த காக்கைதான் முடிக்கப்படாமல் இருக்கும் இரண்டாவது கணக்கு ! அதோ பாருங்கள் ! வடையை தூக்கி சென்று அந்த மரத்தில் அமர்ந்து இருக்கிறது.

எமதர்மன் (குழப்பத்துடன்): என்ன சொல்கிறாய் அந்தக் காக்கைதான் முடிக்கப்படாமல் இருக்கும் இரண்டாவது கணக்கா இங்கு என்ன நடக்கிறது எனக்கு ஒன்றுமே புரியவில்லை !

(In mind voice: சரி அந்த காக்கையின் கணக்கையாவது முடிப்போம்!)

(எமதர்மன் மேகங்களில் இருந்து இடியை உருவாக்கி அந்த மரத்தை நோக்கி பாய்ச்சுகிறார் அப்போது…)

எமதர்மன் (அவசரத்துடன்): சித்ரகுப்தா அது என்ன மரத்தின் கீழே நரி போல் தெரிகிறது. அது அந்த காக்கையிடம் என்ன பேசிக்கொண்டிருக்கிறது. ஏன் நரி திடீரென்று ஓடுகிறது ? அதைத் துரத்திக்கொண்டு காக்கை பறந்து விட்டது ! அப்படி என்றால் என் இடி!

சித்திரகுப்தன் (நக்கலாக): அது மரத்தை எரித்து விட்டது ! ஆனால் காக்கை தப்பித்து விட்டது !

எமதர்மன் (குழப்பத்தின் உட்சத்தில்): எனக்கு இப்போதே கண்ணை கட்டுகிறது சித்திரகுப்தா! ஒன்றுமே புரியவில்லை !

நாரதர் (திடீர் விஜயம்): கண்ணைக் கட்டும் வித்தைகளும் ஆச்சரியங்களும் இந்த பிரபஞ்சத்தில் ஏராளம் அதில் நீ எதை புரியவில்லை என்கிறாய் எமதர்மா ! (சித்திரகுப்தனும் எமதர்மனும் அங்கு நடந்த ஆச்சரியங்களை நாரதரிடம் சொல்கிறார்கள்) நாரதர் (தீர்க்கமாக) : இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது ! இந்த உலகத்தில் ஒரு உயிர் மீது அதீத அன்பு கொண்ட இன்னொரு உயிர் இருக்குமானால் அந்த உயிருக்கு வரும் ஆபத்துகள் இன்னொரு உயிரால் ஏதோ ஒரு வகையில் உணரப்படும் அல்லது உணர்த்தப்படும். இது இறைவனே ஏற்றுக்கொண்ட இயற்கையின் விதி. நீங்கள் சொன்ன நிகழ்வுகள் எல்லாம் இதன் விளைவாகவே என்று நான் நினைக்கிறேன்!

(அதே நேரம்…)

அந்த நரி ( முற்பிறவியில் பெண் காக்கை): எப்படியோ , என் காதலனை காப்பாற்றி விட்டேன்!

காக்கை (முற்பிறவியில் முனுசாமி தாத்தா): ஒரு வழியாக இம்முறையும் என் மனைவி கண்ணம்மாவை காப்பாற்றி விட்டேன்! இருந்தாலும் வடை போச்சே!

End credit scroll starts

எமன் VS வடை

POST CREDIT Scene

மீண்டும் எமலோகத்தில்…

எமதர்மன் (சிந்தித்துக்கொண்டே): சித்ரகுப்தா நாரதர் கொடுத்த Point-இ தற்காலிக கால அவகாசம் கேட்க பயன்படுத்தலாமே தவிர, நிரந்தர முடிவாகச் சொல்லிவிட முடியாது!

சித்திரகுப்தன் (குழுப்பமாக): கால அவகாசமா ? எவ்வளவு நாட்கள் கேட்பதாக இருக்கிறீர்கள் பிரபு ?

எமதர்மன் (சற்று புன்னகையுடன்): அங்குதான் எனக்கு ஒரு யோசனை உள்ளது. இந்த விளையாட்டை நாம் சற்று திருப்பி விளையாடவேண்டும். முதலில் முடிக்கப்பட வேண்டியது பாட்டியின் கணக்கு அல்ல அந்த நரியின் கணக்கு. நீ அந்த நரிக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் மீதம் இருக்கிறது என்று பார் !

அத்தனை நாட்கள் கால அவகாசத்தை அடுத்த ஆடிட்டிங்கில் பெற்று விடுவோம் !

சித்திரகுப்தன்: அப்படியென்றால் மூன்றாவது கணக்கா ?

எமதர்மன்: ஹ! ஹஹா ஹஹாஹா ! (பலமாக சிரிக்கிறார்)

ஒரு சிறந்த திரைக்கதையால் எந்த ஒரு பழைய கதையையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும். இதை நிரூபிக்கும் நோக்கத்தில் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் “பாட்டி வடை சுட்ட கதை’’க்கு எழுதப்பட்ட மாதிரி திரைக்கதை வடிவமே இது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.