திருவனந்தபுரம்: மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மரியாதை செய்யும் வகையில், கேரள மாநிலத்தில் அவரது சொந்த கிராமத்தில் நினைவில்லம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு இந்த ஆண்டுக் கான பட்ஜெட் அறிக்கையில், கேரளாவில் பிறந்து, கலைத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, திரைத் துறை மற்றும் பக்திப் பாடல்கள் என இசையில் மாபெரும் சாதனைகள் படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அவருக்கு நினைவில்லம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த ஊரான பாலக்காடு அருகில் உள்ள எலப்பள்ளி கிராமத்தில் இந்த நினைவில்லம் கட்டப்படுகிறது.
இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எம்.எஸ்.விஸ்வநாதன் இசைப்பிரியர்களால் மெல்லிசை மன்னர் என அழைக்கப்பட்டவர். கேரளாவில் பிறந்த அவர், மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தன் இசையால் ரசிகர்களை ஈர்த்தவர். தமிழில் அவரது திரைப் பங்களிப்பு மிக அதிகம். தன் வாழ்நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர். நான்கு வயதிலேயே தந்தையைப் பறி கொடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். பள்ளிப் படிப்பையே தொடராதவர் இசைப் புலமையால் 13 வயதிலேயே மேடை கச்சேரி களை நிகழ்த்தினார்.
சி.ஆர்.சுப்புராமன் இசைக் குழுவில் விஸ்வநாதன் ஆர் மோனியம் வாசிப்பவராகவும், ராம மூர்த்தி வயலின் வாசிப்பவராகவும் இருந்தனர். ஒரு கட்டத்தில் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இரட்டையர்களாக இசையில் அசத்தினர். இதனால் இவர்கள் இருவருக்கும் மெல்லிசை மன்னர்கள் என்னும் பட்டத்தை சிவாஜி கணேசன் வழங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைப் பயணம் 87-வது வயதில் அவரது இறப்பு வரை மனித மனங்களை வருடியது.
இசை மட்டுமல்லாது திரைப்பட நடிப்பிலும் அவரது பங்களிப்பு இருந்தது. அவரைக் கவுரவிக்கும் வகையில் அவர் பிறந்த ஊரில் நினைவில்லம் கட்ட ஒருகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கேரள அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நினைவு இல்லத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் திரை இசைப் பயணம் குறித்த ஆவணங்கள் இடம்பெற உள்ளன.